×

அண்ணாமலை ஜெயிக்க மாட்டார்: அதிமுக வேட்பாளர் சவால்

கோவை தொகுதி அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன், கோவையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: கோவை தொகுதியில் ஏராளமான குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் உள்ளன. இந்த தொழிலுக்கு 5 சதவீதம் ஜி.எஸ்.டி வரி என்பதே அதிகம். ஆனால், ஒன்றிய அரசு 12 சதவீதம் ஜி.எஸ்.டி வரி விதிக்கிறது. இதனால், இத்தொழில்கள் பெரும்பாலும் முடங்கிப்போய் உள்ளன. கடந்த பத்து வருடமாக இந்த தொழில்துறையினர் கடுமையான அவதிக்கு உள்ளாகி இருக்கின்றனர். இத்துறையினரை கண்டுகொள்ள யாரும் இல்லை. ஆனால், பிரதமர் மோடி தமிழகம் வரும்போது, அங்குமிங்கும் திருக்குறள் பேசினால், தமிழர்கள் ஈர்ப்பு அடைந்து விடுவார்கள் என தப்பு கணக்கு போடுகிறார். அவர், இத்துறை மேம்பாட்டுக்கு கடந்த 10 ஆண்டுகளாக ஏதாவது செய்தாரா?. கோவை தொகுதியில் எனக்கு எந்த சவாலும் இல்லை. சவால் முழுவதும் அண்ணாமலைக்குத்தான். என்னை பொறுத்தவரை, அண்ணாமலை, தேர்தல் களத்திலேயே இல்லை. அவரைப்பற்றி பேசி, எனது நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. அவர், கண்டிப்பாக ஜெயிக்க மாட்டார். மந்திரியும் ஆக மாட்டார். இவ்வாறு அவர் கூறினார்.

* ரூ.2 கோடி ஒதுக்கியது கலைஞர் ஆழித்தேர் சீரமைக்க அதிமுக ஆட்சியில் நிதி ஒதுக்கீடா? பொய் பேசிய எடப்பாடி
நாகை மக்களவை தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரை ஆதரித்து திருவாரூர் தெற்குவீதியில் பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் இரவு பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில், ‘இரட்டை இலை சின்னத்தை முடக்குவதற்கு எத்தனையோ பேர் முயற்சி செய்தனர். அவர்களது முயற்சிகள் தூள் தூளாக்கப்பட்டது. இந்த சின்னத்தை எந்த கொம்பனாலும் தொட்டுக்கூட பார்க்க முடியாது. ஆரம்ப கட்டத்தில் அதிமுகவுடன் கூட்டணி வைத்ததால் தான் பாமகவுக்கு மாம்பழ சின்னம் கிடைத்தது. சீசனுக்கு தகுந்தாற்போல் மாம்பழம் மாறுவதை போல், தேர்தல் வரும்போது அந்த மாம்பழம் மாறி விடுகிறது. அதிமுக ஆட்சி காலத்தில் ஆழித்தேர் சீரமைக்க நிதி ஒதுக்கப்பட்டது,’ என்றார். திமுக ஆட்சி காலத்தின்போது மறைந்த முதல்வர் கலைஞர் ஆழித்தேர் சீரமைக்க ரூ.2 கோடி நிதி ஒதுக்கி நீண்ட நாட்களாக ஓடாமல் இருந்த தேரை ஓட வைத்தார். உண்மை இவ்வாறு இருக்க அதிமுக ஆட்சி காலத்தில் ஆழித்தேர் சீரமைக்க நிதி ஒதுக்கப்பட்டது எடப்பாடி பொய் பிரசாரத்தை செய்து உள்ளார்.

 

* அதிகாரத்தை கேள்வி கேட்கும் இடத்தை மதுரை விட்டு தராது: வானதிக்கு சு.வெங்கடேசன் பதிலடி
மதுரை தொகுதி பாஜ வேட்பாளராக ராம ஸ்ரீனிவாசன் போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவாக நேற்று முன்தினம் பிரசாரம் செய்த அக்கட்சியின் எம்எல்ஏ வானதி சீனிவாசன், ‘தருமியை போல் சு.வெங்கடேசன் கேள்வி கேட்டு கொண்டே இருப்பவர். மீண்டும் அவரையே தேர்வு செய்யப்போகிறீர்களா’ எனக் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பதில் அளிக்கும்விதமாக, பிரசாரத்தில் திமுக கூட்டணியின் மார்க்சிஸ்ட் வேட்பாளர் சு.வெங்கடேசன், ‘‘திருவிளையாடல் புராணத்தில் தருமியின் பக்கம் தான் இறைவனே நின்றார். அதிகாரத்தில் இருப்பவர்கள் தாங்கள் வைத்தது தான் சட்டம் என பேசியபோது, அதற்கு எதிராக தருமியின் குரல், இறைவனின் குரலாக எதிரொலித்தது மதுரை மண்ணில் தான். எனவே, அதிகாரத்தை கேள்வி கேட்கும் இடத்தை மதுரை எப்போதும் விட்டுக் கொடுக்காது. இது, மதுரையின் குரல் மட்டுமல்ல. தமிழகத்தின் குரல். தாய்த்தமிழின் குரல்’’ என பேசினார்.

The post அண்ணாமலை ஜெயிக்க மாட்டார்: அதிமுக வேட்பாளர் சவால் appeared first on Dinakaran.

Tags : Annamalai ,AIADMK ,Singhai Ramachandran ,Coimbatore ,Dinakaran ,
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...